Short Stories
✍️Short Stories

ஆனால் உணர்கிறேன்

ராஜேஸ்வரன் தங்கேஸ்வரன்··16 min read·
#short-story#tamil-fiction#love#reincarnation
ஆனால் உணர்கிறேன்
அவளை பார்த்த அந்த ஒரு கணம்...\
என் கண்களுக்குள் ஏதோ நடந்தது.

---

வட இந்தியாவின் மலைப்பகுதியில் ஒரு சிறிய ரயில் நிலையம். காலை நேர மூடுபனி தண்டவாளங்களின் மேல் படர்ந்திருந்தது — மலைகளின் மடிப்புகளை மூடிக்கொண்டு, எல்லாவற்றையும் ஒரு கனவு போல் மாற்றியது. குளிர்ந்த காற்று மெல்ல வீசியது — மூச்சு விடும்போது வெண்ணிற ஆவி கண்ணுக்கு தெரிந்தது. தொலைவில் பைன் மரங்களின் நிழல்கள் மூடுபனியில் கரைந்தன. உலகமே தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையில் தொங்கிக்கொண்டிருந்தது.

நான் பிளாட்பாரத்தில் நின்றிருந்தேன் — ஏதோ ஒன்றுக்காக காத்திருப்பது மாதிரி, ஆனால் எதற்காக என்று தெரியாமல்.

எதிர் தண்டவாளத்தில் ஒரு ரயில் மெதுவாக வந்து நின்றது. நீராவி படர்ந்த ஜன்னல் கண்ணாடிகள் வழியாக உருவங்கள் மங்கலாக தெரிந்தன — நிழல்கள் போல், கனவுகள் போல். அப்போது — அந்த மூடுபனிக்கு நடுவில், அந்த ஈரமான ஜன்னல் கண்ணாடி வழியாக — ஒரு ஜோடி கண்கள் என்னைப் பார்த்தன.

அவள்.

இரண்டு ரயில்களுக்கு இடையில், இரண்டு ஜன்னல்களுக்கு இடையில், மூடுபனியின் மெல்லிய திரைக்கு இடையில் — அவளைப் பார்த்தேன். அவள் முகம் ஜன்னலின் பனிப்படலத்தால் முழுமையாக தெரியவில்லை — ஆனால் அந்தக் கண்கள்... அவை தெளிவாக இருந்தன. பனியை ஊடுருவும் ஒளி போல், காலத்தை ஊடுருவும் நினைவு போல்.

வெளிச்சம் அவள் உருவத்தை தொட்டு, என் கண் இமைகளை கடந்து உள்ளே நுழைந்தது. விழித்திரையில் அவள் பிரதிபலித்தாள் — தலைகீழாக, சிறியதாக, ஆனால் தெளிவாக.

என் கண்ணின் கோடி கோடி நரம்பு செல்கள் ஒரே நேரத்தில் விழித்துக்கொண்டன.

இவள் யார்? என்று கேட்பது போல்.

அந்த தகவல் மின்னல் வேகத்தில் நரம்பு இழைகளில் மூளையை நோக்கி ஓடியது.

மூளை அவளை பார்த்து முகத்தின் வடிவை அலசியது. கண்களின் ஆழத்தை அளந்தது. புருவங்களின் வளைவை படித்தது. நொடிப்பொழுதில் ஒரு விஞ்ஞானி போல் — துல்லியமாக,

இந்த முகம் புதியதல்ல...

என் மூளையின் ஆழத்தில் எங்கோ ஒரு கதவு திறந்தது — நினைவுகளை தேடத் தொடங்கின. இந்த பிறவியின் அடுக்குகளை தோண்டின — பள்ளி நாட்கள், கல்லூரி தெருக்கள், தொலைந்த பயணங்கள், மறந்த கனவுகள்...

இல்லை. அங்கே இல்லை.

இன்னும் ஆழத்தில் இறங்கின.

பல ஆண்டுகளுக்கு முன்பா? பல தசாப்தங்களுக்கு முன்பா? யாரோ ஒரு மழை நாளில், யாரோ ஒரு சாலை ஓரத்தில், யாரோ ஒரு விடைபெறும் தருணத்தில்...

இவளா?

அல்லது...

அந்த நினைவு இந்த ஜென்மத்திற்கும் அப்பால் போனதா என்று தெரியவில்லை. ஆத்மாவுக்கும் ஒரு நினைவகம் இருக்கிறதா என்று நான் அப்போது நம்பியதில்லை. ஆனால் அவளை பார்க்கும்போது — என் நெஞ்சில் ஏதோ அதிர்ந்தது. பழைய வலி போல், பழைய அன்பு போல், பழைய ஏக்கம் போல். இன்னும் என் மூளை விடை தரவில்லை ஆனால் என் உள்ளம் கேட்டது —

"இவளை நான் எங்கோ சந்தித்திருக்கிறேன்..."

அவள் என் பார்வையை உணர்ந்தாளா என்று தெரியவில்லை.

நான் இன்னும் காலத்தின் எந்த மடிப்பில், எந்த பிறவியின் எந்த மூலையில் நாங்கள் சந்தித்தோம் என்று தேடிக்கொண்டிருந்தேன் —

விடை இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் தேடல் நிற்கவில்லை.

அப்போது — ஒரு விசில் சத்தம் மூடுபனியைக் கிழித்தது. அவள் ரயில் நகரத் தொடங்கியது.

இல்லை. போகாதே.

நான் நடந்தேன் — வேகமாக நடந்தேன் — பிளாட்பாரத்தின் விளிம்பில் ஓடினேன். அவள் ஜன்னலை தொடர்ந்து ஓடினேன் — ஆனால் ரயில் என்னை விட வேகமாக நகர்ந்தது.

அப்போது — அவள் பெட்டியின் வாசலில் தோன்றினாள்.

அவளும் உணர்ந்திருக்கிறாள். அவளும் அதே இழுவிசையை உணர்ந்திருக்கிறாள். உள்ளே அமர்ந்திருக்க முடியாமல், என்னைத் தேடி வாசலுக்கு வந்திருக்கிறாள்.

குளிர்ந்த காற்று அவள் துப்பட்டாவை பறக்கவிட்டது — முதல் முறையாக அவள் முழு முகமும் தெரிந்தது. அந்த கரும்போழ் கண்கள், அந்த கன்னங்கள், அந்த உதடுகளின் மெல்லிய நடுக்கம். மூடுபனி அவளைச் சுற்றி ஒரு பர்தா போல் சூழ்ந்தது — வேறொரு காலத்தின் முகம் இந்தக் காலத்தின் ரயில் வாசலில் நின்றது.

அவள் கண்களில் ஏதோ இருந்தது — அதிர்ச்சியா, அடையாளம் காணுதலா, ஏக்கமா — என்னால் பிரித்தறிய முடியவில்லை. ஆனால் அவள் கண்கள் என்னைப் பார்த்தன — ஆயிரம் ஆண்டுகளாக காத்திருந்தவள் மாதிரி, கடைசியாக கண்டுபிடித்தவள் மாதிரி.

ரயில் வேகமாக நகர்ந்தது. அவள் உருவம் சிறியதாகியது — மூடுபனியில் கரைந்தது — ஒரு கனவு கலைவது போல், ஒரு நினைவு மறைவது போல்.

என் கண்கள் தானாக மூடிக்கொண்டன.

இருள் வந்தது — ஆனால் அது வெறும் இருளில்லை. அந்த இருளுக்கு ஆழம் இருந்தது. அகலம் இருந்தது. அதற்குள் ஏதோ வாழ்ந்தது — மூச்சுவிட்டது — காத்திருந்தது. கடலின் அடியில் புதைந்திருந்த ஒரு விளக்கு மெதுவாக எரிய ஆரம்பிப்பது போல் என் நினைவின் இருளில் ஒரு ஒளி துடிக்க தொடங்கியது. முதலில் மங்கலாக — பிறகு தெளிவாக.

பிறகு — தாங்க முடியாத அளவுக்கு தெளிவாக.

மனித மூளையில் நூறு கோடி நியூரான்கள் வாழ்கின்றன.

ஒவ்வொரு நியூரானும் ஒரு தீபம் மாதிரி — தினமும் எரிகிறது, அணைகிறது, மறுபடியும் எரிகிறது. ஒவ்வொரு தடவையும் ஒரு உணர்வு தொடும்போது — ஒரு வாசனை, ஒரு சத்தம், ஒரு சுவை, ஒரு தொடுதல் — அந்த நியூரான்கள் ஒன்றோடொன்று பேசிக்கொள்கின்றன. மின்சாரம் போல் ஓடுகின்றன. வழிகள் உருவாகின்றன — நினைவின் வழிகள். சில வழிகள் அடிக்கடி பயணிக்கப்படுகின்றன — அவை தெளிவாக இருக்கும். சில வழிகள் மறக்கப்படுகின்றன — புல் மூடிய பழைய பாதை மாதிரி. ஆனால் சில வழிகள் — சில நினைவுகள் — மறைக்கப்படுகின்றன. யாரோ ஒருவர் கதவை மூடி, தாளிட்டு, திறவுகோலை எங்கோ வீசியிருப்பார்கள். ஆனால் அந்த கதவு உடைவதில்லை. காலம் அதை அழிப்பதில்லை.

மூளை மனிதனின் புதிய வாழ்க்கையில் முந்தைய பிறவியின் நினைவுகளை சேமிக்க முடியுமா என்பதில் எனக்கு நிச்சயமில்லை. ஏனெனில், அவளுடைய நினைவு இப்போது எனக்குக் கிடைத்திருக்கிறது — ஆனால் இந்தப் பிறவியில் அல்ல...

என் நினைவு என்னை அழைத்துச் சென்றது, ஒரு காட்சியைக் காண்பித்தது.

---

ஒரு பாரசீக சந்தை. நூற்றுக்கணக்கான மனிதர்கள் தங்கள் வேலையில் மூழ்கியிருந்தனர். நறுமண வியாபாரிகள், தங்க நிற விற்பனையாளர்கள், பட்டுத் தறியாளர்கள், குதிரைகளின் குளம்பணிகள் — அனைவரும் தங்கள் உலகத்தில் முழ்கியிருந்தனர். ஆனால் அந்தக் கண்கள்... அவை என்னைப் பார்த்துக்கொண்டிருந்தன.

இது ஒருவேளை பல ஆண்டுகளுக்கு முன்பான பாரசீக நாடாக இருக்கலாம். அந்தப் பெண் என்னை ஏன் பார்த்தாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் அந்தக் கண்கள் — அவை வெறும் கண்கள் அல்ல. அவை பேரளவு ஈர்ப்பு போல் செயல்பட்டன. அந்த ஈர்ப்பு எல்லா அண்டங்களையும் தன்னுள் இழுத்துக்கொள்ளும் கருந்துளை போல் செயல்பட்டன.

அந்தப் பெண் என்னை நோக்கி நடந்து வந்தாள். ஆனால் என்னால் அவள் கண்களை மட்டுமே பார்க்க முடிந்தது — ஏனெனில் அவள் முகத்தை பர்தாவில் மறைத்திருந்தாள்.

பர்தா — அந்த பண்டைய துணியின் பின்னால், அவள் கண்கள் மட்டுமே என்னிடம் பேசின. அந்தக் கண்கள் ஆயிரம் வார்த்தைகளைப் பேசின. அந்தக் கண்கள் முழு பிரபஞ்சத்தையே பேசின. அந்தக் கண்களின் கரும்போழில் நான் விழுந்தேன்.

அவள் என்னை நோக்கி வந்து கேட்டாள்...

"உன்னை நான் எங்கோ பார்த்திருக்கிறேன்... ஆனால் எங்கு என்று தெரியவில்லை. உன்னை நினைவிருக்கிறதா? நீ என்னை எப்போதாவது பார்த்திருக்கிறாயா?"

நான் சொன்னேன்...

"இல்லை... ஆனால் என்னையும் அதே உணர்வு தாக்குகிறது."

அவள் தொடர்ந்தாள்...

"உன்னிடம் இதை மறைக்க முடியவில்லை. உன் கண்கள் என்னை எங்கோ அழைத்துச் செல்கின்றன. இந்த ஜென்மத்தில் நாம் சந்தித்தோமா என்று தெரியவில்லை. இந்த வார்த்தைகளை சொல்கிறேன் என்று தெரிந்தும்... மறைக்க முடியவில்லை. என் வார்த்தைகள் என் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிந்தும் சொல்லிவிடுகிறேன். நீ என் நினைவில் இருக்கிறாய்... ஆனால் நாம் எங்கு சந்தித்தோம் என்று தெரியவில்லை. தயவுசெய்து என்னை தவறாக நினைக்காதே. என் இதயமும் என் மனசும் என் வார்த்தைகளை கட்டுப்படுத்த விடவில்லை. நீ என்னுள் ஏதோ செய்கிறாய்...

நான் உன்னை எப்போதோ ஏமாற்றி இருக்கிறேன் என்று தோன்றுகிறது... எப்போது என்று தெரியவில்லை. என் இதயம் மன்னிப்பு கேட்டு வலிக்கிறது.

என் வாழ்க்கையில் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை... ஆனால் தயவுசெய்து மன்னி என்னை."

அவன் சொன்னான்...

"வேண்டாம்... மன்னிப்பு என்று சொல்லாதே.

நான் உன்னை மன்னிக்க வந்தவன் அல்ல.

நான் உன்னை வணங்க வந்தவன்.

இருவருக்கும் இப்படி ஒரு உணர்வு ஏன் வருகிறது என்று புரியவில்லை.

நாம் யாரோ ஒருவரால் கட்டுப்படுத்தப்படுகிறோமா?

நாம் யாரோ ஒருவரின் பொம்மைகளா?"

அவள் நெருங்கி வந்தாள். பர்தாவின் பின்னால் அவள் கண்கள் மட்டுமே தெரிந்தன — ஆனால் அந்தக் கண்கள் போதும், ஒரு முழு வாழ்க்கையைப் படிக்க.

அவள் நின்றாள். என் முன்னால். மூச்சுக்காற்றின் தூரத்தில்.

மௌனம் பேசியது — வார்த்தைகளை விட உரக்க.

"நீங்கள்..." அவள் குரல் நடுங்கியது — காலை நேர பனித்துளி ஒரு இதழில் விழுவது போல், மென்மையாக, ஆனால் ஆழமாக.

"என்னை அறிவீர்களா?" என்றேன் நான்.

அவள் கண்கள் சிமிட்டின. ஒரு கணம் அவள் தயங்கினாள் — பின் சொன்னாள்:

"அறியேன்... ஆனால் உணர்கிறேன். உங்கள் முகத்தை இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறேன் — கனவிலா, நினைவிலா என்று தெரியவில்லை."

என் நெஞ்சம் ஒரு கணம் நின்றது.

"நானும் அதையே உணர்கிறேன்," என்றேன் — என் குரல் என்னுடையதா என்று சந்தேகப்படும் அளவுக்கு மெதுவாக. "உன் கண்களைப் பார்த்த கணம் — என் உள்ளே ஏதோ ஒரு கதவு திறந்தது. மூடப்பட்ட ஒரு அறை — அதில் யாரோ காத்திருந்தது போல்."

அவள் நடந்தாள், நானும் நடந்தேன். சந்தையின் இரைச்சலுக்கு நடுவில் எங்கள் உரையாடல் ஒரு தனி உலகத்தை உருவாக்கியது.

"இந்த சந்தையில் நூறு பேர் இருக்கிறார்கள்," அவள் சொன்னாள், "ஆனால் என் கண்கள் உங்களை மட்டுமே தேர்ந்தெடுத்தன. ஏன் என்று தெரியவில்லை."

"ஒருவேளை கண்கள் தேர்ந்தெடுக்கவில்லையோ — ஆத்மா தேர்ந்தெடுத்ததோ," என்றேன் நான்.

அவள் சிரித்தாள் — அந்த சிரிப்பு பாரசீக ரோஜாவின் இதழ்கள் விரிவது போல் இருந்தது. அந்த ஒரு சிரிப்பில் நான் ஆயிரம் ஜென்மங்களின் தாகத்தை மறந்தேன்.

"நீங்கள் கவிஞரா?" என்று கேட்டாள்.

"இல்லை — ஆனால் உன்னைப் பார்த்த பிறகு வார்த்தைகள் தானாக வருகின்றன. நீ என் மௌனத்திற்கு மொழி தந்தவள் போல்."

சந்தையின் ஒரு மூலையில் ஒரு பழைய மரத்தின் நிழலில் அமர்ந்தோம். நேரம் எங்களை மறந்தது — அல்லது நாங்கள் நேரத்தை மறந்தோம்.

"உன் பெயர் என்ன?" கேட்டேன்.

"ஃபரா," என்றாள். "அர்த்தம் — மகிழ்ச்சி."

"பொருத்தமான பெயர். நீ வருவதற்கு முன் என் வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் இருந்தது — அதற்கு பெயர் தெரியவில்லை. இப்போது தெரிகிறது — அது உன் இல்லாமையின் வலி."

அவள் கண்கள் நிறைந்தன. பர்தாவின் பின்னால் ஒரு கண்ணீர்த்துளி வழிந்தது — அது கண்ணீர் அல்ல, ஆத்மா பேசிய மொழி.

"என்னையும் இதே உணர்வு வாட்டுகிறது," அவள் சொன்னாள், குரல் கம்மி. "நான் தினமும் இந்த சந்தைக்கு வருவேன் — ஏதோ ஒன்றைத் தேடி. என்ன தேடுகிறேன் என்று தெரியாது. இன்று புரிகிறது — நான் உங்களைத் தேடிக்கொண்டிருந்தேன்."

காற்று மெல்ல வீசியது — அவள் பர்தாவின் ஒரு மூலையை அசைத்தது. ஒரு கணம் அவள் முகத்தின் ஒரு பகுதி தெரிந்தது — அந்த ஒரு கணம் போதும், என் ஏழு ஜென்மங்களின் தேடலுக்கு விடை கிடைக்க.

"ஃபரா..." என் குரல் நடுங்கியது. "நான் உனக்கு ஒன்று சொல்ல வேண்டும்."

"சொல்லுங்கள்."

"முதல் முறை பார்க்கிறேன் என்பது உண்மையாக இருக்கலாம் — ஆனால் முதல் முறை நேசிக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது. இந்த அன்பு பழையது — மிகப் பழையது. காலத்தின் ஆரம்பத்தில் ஊன்றப்பட்ட விதை போல், இன்று மலர்கிறது. நான் உன்னை நேசிக்கிறேன் — இந்தப் பிறவியில் மட்டுமல்ல, ஒவ்வொரு பிறவியிலும் நேசித்திருக்கிறேன்."

மௌனம். நீண்ட மௌனம்.

பின் அவள் கைகள் மெல்ல உயர்ந்தன — பர்தாவை விலக்கின.

முதல் முறையாக அவள் முழு முகத்தையும் கண்டேன்.

அவள் அழகு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது — ஆனால் அவள் கண்களில் ஓடிய கண்ணீர் அவளின் பதிலைச் சொன்னது.

"நானும்," அவள் கிசுகிசுத்தாள் — காற்றில் கரையும் நறுமணம் போல். "நானும் உங்களை நேசிக்கிறேன். இந்த உணர்வுக்கு காரணம் தேவையில்லை. விளக்கம் தேவையில்லை."

"சில அன்புகள் நிரூபணம் கேட்பதில்லை — அவை உண்மையாக இருப்பதே அவற்றின் சான்று."

\[அன்று அந்த பாரசீக சந்தையில் இரண்டு அந்நியர்கள் சந்தித்தார்கள். ஆனால் அவர்கள் அந்நியர்கள் அல்ல — காலத்தின் ஏதோ ஒரு மடிப்பில் பிரிக்கப்பட்ட இரண்டு ஆத்மாக்கள், மீண்டும் ஒன்று சேர்ந்தன.]

அவள் கை என் கையைத் தொட்டது — அந்தத் தொடுதலில் ஆயிரம் ஜென்மங்களின் ஏக்கம் தீர்ந்தது.

விடை கிடைத்தது. தேடல் முடிந்தது. ஆனால் பயணம் — இப்போதுதான் தொடங்கியது.

"ஃபரா... நமக்கு முன்பு என்ன நடந்தது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை, நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை," என்றேன் நான், என் குரல் கனத்தது. "ஆனால் ஒன்றை உறுதியாக நம்புகிறேன் — ஏதோ ஒரு காலத்தில், ஏதோ ஒரு இடத்தில், நான் உன்னை விட்டுப் பிரிந்திருக்கிறேன். அது என் விருப்பத்தால் நிச்சயமாக இருக்காது. உன்னை விட்டு நான் என் விருப்பத்தால் போயிருக்க மாட்டேன் — ஏனெனில் நான் வாழ்வதே உனக்காக மட்டுமே."

அவள் கண்கள் கலங்கின. மரத்தின் நிழலில் விழுந்த வெயிற்கீற்றுகள் அவள் கண்ணீரில் மின்னின.

"எனக்கு யாரும் இல்லை," அவள் சொன்னாள் — அந்தக் குரலில் வலி இருந்தது, ஆனால் குற்றச்சாட்டு இல்லை. "நான் ஓர் அனாதை. என் தாய் என்னை ஈன்றபோதே இறந்தாள் என்று கேள்விப்பட்டேன். என் தந்தையை நான் பார்த்ததே இல்லை. என்னை வளர்த்தது இந்த நகரின் தெருக்கள்."

"இப்போது எங்கே இருக்கிறாய்?" கேட்டேன், என் குரலில் கவலை ததும்பியது.

"சந்தையின் கிழக்கு மூலையில் ஒரு வணிகர் குடும்பம் இருக்கிறது — ஹாஜி முஸ்தபாவின் மாளிகை. அவர் பட்டுத் துணி வியாபாரி. அவர் மனைவி ஃபாத்திமா அம்மாவுக்கு வீட்டு வேலை செய்கிறேன். காலையில் கிணற்றிலிருந்து நீர் எடுத்து வருவேன். மாளிகையின் தரை தளங்களை கழுவுவேன். பட்டுத் துணிகளை நெய்யும் பெண்களுக்கு நூல் சுற்றுவேன். மாலையில் சமையலறையில் உதவி செய்வேன் — நான் போட்டும், கொழுக்கட்டையும், குங்குமப்பூ சாதமும் தயாரிப்பேன். அதற்கு ஈடாக ஒரு கூரையும், ஒரு வேளை உணவும், ஒரு பழைய பாயும் கிடைக்கும்."

அவள் சொன்னபோது அவள் முகத்தில் வெட்கமோ வருத்தமோ இல்லை — ஒரு போர்வீரனின் பெருமை இருந்தது. வறுமையில் வாழ்ந்தாலும் வாழ்க்கையை சரணடையாத ஒரு பெண்ணின் தன்மானம்.

என் நெஞ்சம் பிழிந்தது.

"என்னைப் பற்றி கேட்கிறாயா?" என்றேன் நான், புன்னகை பூக்க முயன்று.

"சொல்லுங்கள்," அவள் கண்கள் ஒளிர்ந்தன.

"நான் தாரிக். என் தந்தை இந்த நகரின் புகழ்பெற்ற தங்கக் கொல்லர்களில் ஒருவர் — ஹாஜி இப்ராஹிம். நான்கு தலைமுறைகளாக எங்கள் குடும்பம் தங்கத்தை உருக்கி, நகைகளாக வடிக்கிறது. இந்த சந்தையின் நடுவில் உள்ள பெரிய கடை — 'தங்க சிங்கம்' என்று அழைப்பார்கள் — அது எங்களுடையது. அரசர்களுக்கும், பிரபுக்களுக்கும் நகை செய்வோம். பாரசீகத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வணிகர்கள் வருவார்கள் — எங்கள் நகைகளின் நுட்பத்திற்காக."

அவள் ஒரு கணம் அமைதியாக இருந்தாள். பின் கேட்டாள் — "அப்படியானால் நீங்கள் இந்த நகரின் செல்வந்தர்களில் ஒருவர்... என்னைப் போன்ற ஒரு வேலைக்காரியிடம் ஏன் பேசுகிறீர்கள்?"

"ஃபரா," என் குரல் உறுதியாக ஒலித்தது. "தங்கத்தை உருக்கி நகை செய்வது எனக்கு தெரியும். ஆனால் உன் கண்களில் இருக்கும் ஒளியை எந்த உலோகத்திலும் வடிக்க முடியாது. நான் செல்வந்தனாக இருக்கலாம் — ஆனால் உன்னைச் சந்திக்கும் வரை நான் ஏழையாகத்தான் இருந்தேன். ஏனெனில் என் ஆத்மாவிற்கு தேவையானது என்னிடம் இல்லை — அது இன்றுதான் கிடைத்தது."

அவள் கண்கள் மீண்டும் நிறைந்தன.

மாலை சாய்ந்தது. சூரியன் பாரசீகத்தின் மண் கோபுரங்களுக்கு பின்னால் மறையத் தொடங்கியது. வானம் குங்குமப்பூ நிறத்தில் எரிந்தது — எங்கள் இருவரின் நிழல்கள் ஒன்றோடொன்று கலந்தன.

ஃபரா எழுந்தாள்.

"நான் செல்ல வேண்டும்," அவள் சொன்னாள், குரலில் வலி. "ஃபாத்திமா அம்மா காத்திருப்பார். நான் தாமதமானால் என் உணவு கிடைக்காது."

"ஃபரா —" என் கை அவள் கையை நோக்கி நீண்டது, ஆனால் நிறுத்திக்கொண்டேன்.

"நாளை," அவள் சொன்னாள், திரும்பிப் பார்த்து. "நாளை மதியம் — இதே மரத்தின் கீழ், இதே நிழலில் — நான் வருவேன்."

"உறுதியா?"

"இந்த கண்கள் பொய் சொல்லாது — நீங்களே பாருங்கள்."

அவள் திரும்பி நடந்தாள். பர்தா மீண்டும் அவள் முகத்தை மூடியது. சந்தையின் கூட்டத்தில் அவள் கரைந்தாள் — ஒரு நறுமணம் காற்றில் கரைவது போல். நான் அங்கேயே நின்றிருந்தேன். என் கால்கள் நகர மறுத்தன. அவள் சென்ற திசையை என் கண்கள் பற்றிக்கொண்டிருந்தன — இருள் வந்த பிறகும்.

அடுத்த நாள் நான் அந்த மரத்தின் கீழ் இருந்தேன் — சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்பே. என் கையில் ஒரு சிறிய பொற்காசு நகை இருந்தது — நேற்று இரவு தூக்கமின்றிப் படுத்து, விடிகாலையில் எழுந்து, என் சொந்தக் கைகளால் செய்தது. ஒரு சிறிய நட்சத்திர வடிவம் — அவள் கண்களின் ஒளிக்கு சமர்ப்பணம்.

மதியம் வந்தது. அவள் வரவில்லை.

மாலை சாய்ந்தது. அவள் வரவில்லை.

இரவு விழுந்தது. நான் அசையவில்லை.

இரண்டாம் நாள் — அதே மரம், அதே நிழல், அதே காத்திருப்பு.

அவள் வரவில்லை.

மூன்றாம் நாள் — நான் சந்தையின் ஒவ்வொரு கடையிலும் கேட்டேன். "ஃபரா என்ற பெண்ணை அறிவீர்களா? பர்தா அணிந்த, ஆழமான கண்கள் கொண்ட ஒரு இளம் பெண்?" யாருக்கும் தெரியவில்லை. யாரும் அறியவில்லை.

நான்காம் நாள் — ஹாஜி முஸ்தபாவின் மாளிகையைத் தேடினேன். சந்தையின் கிழக்கு மூலையில் ஒவ்வொரு வீட்டையும் தட்டினேன். "பட்டு வியாபாரி ஹாஜி முஸ்தபா?" வயதான ஒரு மனிதன் சொன்னான் — "ஹாஜி முஸ்தபா? அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர் மனைவி ஃபாத்திமா வடக்கே சென்றுவிட்டார்."

என் உடல் நடுங்கியது.

ஐந்தாம் நாள் — நான் நகரின் ஒவ்வொரு தெருவிலும் நடந்தேன். கிணறுகளின் அருகில், பட்டு நெசவு கூடங்களில், ஏழைகளின் குடிசைகளில் — அவளைத் தேடினேன். ஒவ்வொரு பர்தா அணிந்த பெண்ணையும் நிறுத்தி கண்களைப் பார்த்தேன் — அந்தக் கரும்போழ் கண்கள் எங்கும் இல்லை.

ஆறாம் நாள் — நான் சாப்பிடவில்லை. தூங்கவில்லை. என் தந்தையின் கடையில் தங்கத்தை தொடவில்லை. என் கைகள் அவளுக்காக செய்த நட்சத்திர நகையை மட்டும் இறுகப் பற்றிக்கொண்டிருந்தன. என் உதடுகள் ஒரே பெயரை மட்டும் உச்சரித்தன — "ஃபரா... ஃபரா... ஃபரா..."

ஏழாம் நாள் காலையில் நான் அந்த மரத்தின் கீழ் அமர்ந்தேன். என் உடல் வெறும் எலும்புக் கூடாக இருந்தது. என் கண்கள் குழிவிழுந்தன — ஆனால் அவை இன்னும் சந்தையின் கூட்டத்தில் அவளைத் தேடிக்கொண்டிருந்தன.

மாலையில் — சூரியன் மீண்டும் மண் கோபுரங்களுக்கு பின்னால் மறையும்போது — என் நெஞ்சில் ஒரு கடுமையான வலி. இதயம் தன் கடைசி போராட்டத்தை நடத்தியது.

நான் கீழே சாய்ந்தேன் — அந்த மரத்தின் வேர்களின் மீது. என் கை விரிந்தது — அதில் அந்த பொன் நட்சத்திரம் மின்னியது.

"ஃபரா..." என் கடைசி மூச்சு அவள் பெயரை சுமந்தது.

என் கண்கள் மூடின. பாரசீக சந்தையின் இரைச்சல் மெல்ல மெல்ல மறைந்தது. நறுமணங்கள் கரைந்தன. ஒலிகள் அடங்கின. எல்லாம் இருளானது. ஆனால் அந்த இருளிலும் — இரண்டு கண்கள் மின்னின. கரும்போழ் போன்ற அந்தக் கண்கள்.

அவள் கண்கள்.

---

ஒரு மின்னல் போல் — நான் திரும்பி வந்தேன்.

இப்போது. இந்த நேரம். இந்த இடம். இந்த வாழ்க்கை.

என் நெஞ்சம் படபடத்தது. என் நெற்றியில் வியர்வை. என் கைகள் நடுங்கின. பாரசீக சந்தையின் மணல் நிறம் மறைந்து — ரயில் நிலையத்தின் மூடுபனி மீண்டும் என்னைச் சூழ்ந்தது. குளிர்ந்த காற்று என் கன்னங்களில் இருந்த கண்ணீரை உலர்த்தியது — எப்போது அழுதேன் என்று தெரியவில்லை.

கனவா? நினைவா? முந்தைய பிறவியா?

எதுவாக இருந்தாலும் — அந்த வலி உண்மை. அந்த இழப்பு உண்மை. அந்தக் கண்களின் ஏக்கம் உண்மை.

நான் நிமிர்ந்து பார்த்தேன் —

அவள் இருந்தாள்.

அங்கே — பிளாட்பாரத்தின் மறுமுனையில் — மூடுபனியின் மெல்லிய திரைக்கு அப்பால் — அவள் நின்றிருந்தாள். அதே கண்கள். அதே ஆழம். அதே கரும்போழ்.

அவள் ரயிலிலிருந்து இறங்கியிருந்தாள். அவளால் போக முடியவில்லை. அவளும் அதே இழுவிசையால் கட்டுண்டவள் — அவளும் திரும்பி வந்திருந்தாள். இந்தப் பிறவியில் அவள் திரும்பி வந்தாள் — போன பிறவியில் வர முடியாமல் போனது போல் அல்ல.

ஒரு நொடி — உலகம் நின்றது. மூடுபனி கூட நகர்வதை நிறுத்தியது. காற்று கூட சுவாசிப்பதை நிறுத்தியது. பிளாட்பாரத்தின் இரண்டு முனைகளில் இரண்டு ஆத்மாக்கள் நின்றன — ஆயிரம் ஆண்டுகளின் இடைவெளியை ஒரே பார்வையில் அளந்தன.

பிறகு அவள் நடந்தாள் — என்னை நோக்கி.

மெதுவாக முதலில் — ஒவ்வொரு அடியிலும் நிச்சயமின்மை இருந்தது — கனவா நிஜமா என்ற தயக்கம் இருந்தது. பிறகு வேகமாக — தயக்கம் உடைந்தது, நம்பிக்கை பிறந்தது. பிறகு — ஓடினாள். மூடுபனியை கிழித்துக்கொண்டு, தூரத்தை அழித்துக்கொண்டு, ஆயிரம் ஆண்டுகளின் பிரிவை ஒரே ஓட்டத்தில் தாண்டிக்கொண்டு — என்னை நோக்கி ஓடினாள்.

அவள் என்னை அணைத்தாள்.

வார்த்தைகள் இல்லை. விளக்கங்கள் இல்லை. ஒரு குளிர்ந்த மூடுபனி பிளாட்பாரத்தில், இரண்டு அந்நியர்கள் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டார்கள் — ஆனால் அவர்கள் அந்நியர்கள் அல்ல. ஆயிரம் பிறவிகளின் ஏக்கம் ஒரே அணைப்பில் தீர்ந்தது போல் — அந்த அணைப்பு இருந்தது.

அவள் நெஞ்சில் என் இதயம் அடித்தது — அல்லது என் நெஞ்சில் அவள் இதயம் அடித்தது — யாருடைய இதயம் என்று பிரித்தறிய முடியவில்லை. இரண்டும் ஒரே தாளத்தில் அடித்தன — ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மாறாத தாளத்தில்.

மூடுபனி மெல்ல மெல்ல விலகியது — எங்களுக்கு இடம் கொடுப்பது மாதிரி. சூரியனின் முதல் கிரணங்கள் மலைகளின் விளிம்பில் தெரிந்தன — பாரசீகத்தின் மண் கோபுரங்களுக்கு பின்னால் உதித்த அதே சூரியன் போல்.

எவ்வளவு நேரம் அப்படி நின்றோம் என்று தெரியவில்லை. நொடியா, மணி நேரமா, யுகமா — அது முக்கியமில்லை. காலம் எங்களுக்கு முன் மண்டியிட்டது — இந்த ஒரு தருணத்தை தடுக்க முடியாமல்.

---

மெதுவாக விலகினோம். அவள் கண்களில் கண்ணீர் — ஆனால் அது சோகத்தின் கண்ணீர் அல்ல. கண்டுபிடித்ததன் கண்ணீர்.

என் உதடுகள் தாமாகவே ஒரு வார்த்தையை உச்சரித்தன —

"உன்னை தெரியும் எனக்கு. என்னை தெரியுமா உனக்கு?"

அவள் கண்கள் ஒரு நிமிஷம் நின்றன. என்னையே பார்த்தாள் — எதோ தேடுவது மாதிரி. திரும்பி வேற பக்கம் பார்த்தாள். காத்துல அவள் முடி பறந்தது.

நான் காத்திருந்தேன்.

பிறகு — மிகவும் மெதுவாக, தன்னையே நம்பாதது மாதிரி —

"தெரியாது என்று சொல்ல முடியவில்லை... உணர்கிறேன் என்று மட்டும் தெரிகிறது."

என் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பாரசீக சந்தையில் அவள் சொன்ன அதே வார்த்தைகள் — இன்று, இங்கே, இந்த மூடுபனி பிளாட்பாரத்தில், மீண்டும்.

"உன் பெயர் என்ன?" என்று கேட்டேன்.

மெதுவாக சொன்னாள் —

"பிரியா."

பிரியா. அன்பானவள். வேறொரு காலத்தில் வேறொரு பெயர் — ஆனால் அர்த்தம் இதுவே. எப்போதும் இதுவே.

நாங்கள் பிளாட்பாரத்தின் ஓரமாக நடந்தோம். மூடுபனி மெல்ல விலகிக்கொண்டிருந்தது. காலை வெயில் மலைகளின் விளிம்பில் தெரிந்தது. எங்கே போகிறோம் என்று தெரியவில்லை — ஆனால் இதே மாதிரி நடந்திருக்கிறோம் என்று இருவருக்கும் தெரிந்தது.

மௌனமாக நடந்தோம். வார்த்தைகள் தேவையில்லை — அவள் அருகில் இருப்பதே போதும் என்று என் ஆத்மா சொன்னது.

"இந்த உணர்வு இன்று தொடங்கியதில்லை," என்றேன் — என் குரல் நடுங்கியது. "இது பழமையான உணர்வு. உன் பெயர் கேட்பதற்கு முன்பே உன்னை தெரியும் என்று என் உள்ளம் சொன்னது."

அவள் கண்ணீர் ஒரு துளி கன்னத்தில் வழிந்தது. துடைக்கவில்லை.

ஆழமாக மூச்சுவிட்டாள் — பிறகு மெதுவாக, தெளிவாக சொன்னாள் —

"சில அன்புகள் நிரூபணம் கேட்பதில்லை. அவை உண்மையாக இருப்பதே அவற்றின் சான்று."

அந்த வார்த்தைகள் காற்றில் கரையவில்லை. என் நெஞ்சில் தங்கின — ஆழமாக, அழியாமல். ஏனென்றால் அவை இன்று பிறந்தவையில்லை — யுகங்களுக்கு முன்பே சொல்லப்பட்டவை.

---

அப்போது — எதிர் பிளாட்பாரத்தில் ஒரு ரயில் வந்து நின்றது.

கதவுகள் திறந்தன. பயணிகள் கொட்டினார்கள் — குடும்பங்கள், பெட்டிகள், கூலிகள், குழந்தைகள். ஒரு சாதாரண ரயில் நிலையத்தின் சாதாரண காட்சி. எந்த அபாயமும் இல்லை. வெறும் மனிதர்கள் — ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போகிறவர்கள்.

கூட்டம் எங்களுக்கு இடையே வந்தது — நதி மாதிரி. நான் ஒரு பக்கம். அவள் ஒரு பக்கம். அவள் கையை பிடித்திருந்தேன் — விரல்கள் பின்னப்பட்டிருந்தன. ஆனால் கூட்டம் அலட்சியமானது. ஒரு கூலியின் தள்ளுவண்டி எங்களுக்கு இடையே புகுந்தது.

விரல்கள் நழுவின. ஒவ்வொன்றாக. கடைசி விரல் — போனது.

அவள் பெயர் சொல்லி கத்தினேன். கூட்டத்தை தள்ளிக்கொண்டு போனேன். ஆனால் கூட்டம் — கூட்டம் அன்பை பற்றி கவலைப்படுவதில்லை. அது எப்போதும் போல் நகர்ந்தது — அலட்சியமாக, நிறுத்த முடியாமல்.

கூட்டம் கரைந்தது.

பிளாட்பாரம் காலியானது.

அவள் இல்லை.

மாயமாக மறைந்தது அல்ல. கூட்டத்தில் தொலைந்தது. இந்தியாவின் ரயில் நிலையங்களில் நூறு வருடமாக மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொலைத்துக்கொள்ளும் அதே சாதாரண விதத்தில்.

பாரசீகத்தில் ஃபரா சந்தையின் கூட்டத்தில் மறைந்தாள். இங்கே பிரியா பிளாட்பாரத்தின் கூட்டத்தில் மறைந்தாள். வேறு நூற்றாண்டு. அதே முறை. விதிக்கு பூகம்பமோ புயலோ தேவையில்லை — ஒரு கூட்டம் போதும்.

கொடுமை என்னவென்றால் — இது தடுக்கக்கூடியதாக இருந்தது. இன்னும் இறுக்கமாக பிடித்திருந்தால். கூலி ஒரு நொடி தாமதமாக வந்திருந்தால். பயணிகள் குறைவாக இருந்திருந்தால். ஆயிரம் சிறிய 'ஆனால்'கள் — ஒன்று கூட எங்கள் பக்கம் வரவில்லை. விதி சண்டை போடுவதில்லை — சாதாரண விஷயங்களை மிகக் கொடூரமான வரிசையில் அடுக்குகிறது.

---

தேடினேன். பிளாட்பாரம் 1, 2, 3. காத்திருப்பு அறை. டிக்கெட் கவுண்டர். வெளியே உள்ள தெருக்கள். தேநீர் கடை. அருகில் உள்ள கோவில். எல்லா இடத்திலும் ஒரே கேள்வி — பிரியா என்ற பெண்ணை பார்த்தீர்களா?

யாருக்கும் தெரியவில்லை. அவள் முழுப் பெயர் கூட என்னிடம் இல்லை. வெறும் 'பிரியா' — இந்த மலை ஊரில் ஆயிரம் பிரியாக்கள் இருக்கலாம்.

பாரசீகத்தில் நான் காத்திருந்தேன் — ஏழு நாட்கள் காத்திருந்தேன். அந்த காத்திருப்பு என்னை கொன்றது. இந்த முறை காத்திருக்கப் போவதில்லை என்று என் எலும்புகள் சொன்னன.

மாலை சாய்ந்தது. நிழல்கள் நீண்டன. என் கால்கள் என்னை ரயில் நிலையத்திற்கு கிழக்கே இழுத்துச் சென்றன — ஏன் என்று தெரியவில்லை. பாரசீகத்தில் ஃபரா கிழக்கு மூலையில் இருந்தது போல், இங்கேயும் ஏதோ கிழக்கில் இருப்பது போல்.

---

தண்டவாளங்களுக்கு அப்பால் ஒரு சிறிய நதி. ஒரு பழைய கல் பாலம். யாரும் வராத இடம்.

பாலத்தை நெருங்கியபோது — ஒரு முட்செடியில் ஏதோ சிக்கியிருந்தது. துப்பட்டா. அவள் துப்பட்டா.

கீழே இறங்கினேன். கற்களில் வழுக்கினேன். கையில் கீறல் பட்டது — தெரியவில்லை. உள்ளே நூறு பிறவிகளின் வலி எரிந்துகொண்டிருக்கும்போது இந்த உடலின் வலி ஒரு பொருட்டல்ல.

ஈரமான மண்ணில் காலடிச் சுவடுகள். சிறிய பாதங்கள். பாலத்தை நோக்கி போகின்றன. திரும்பி வரவில்லை.

பாலத்தின் நிழலுக்குள் நுழைந்தேன்.

அவள் இருந்தாள். நதிக்கரையில். மண்ணில். ஒரு கை நதியை தொட்டுக்கொண்டிருந்தது. மறு கை நெஞ்சின் மீது — ஏதோ ஒன்றை பிடித்துக்கொண்டிருந்தது. எந்த காயமும் இல்லை. எந்த வலியின் அடையாளமும் இல்லை. தூங்குவது மாதிரி — ஆனால் தூக்கம் இல்லை என்று என் ஆத்மா சொன்னது.

என் கால்கள் உடைந்தன. மண்ணில் விழுந்தேன்.

அவள் முகத்தில் இருந்த முடியை விலக்கினேன் — மிகவும் மெதுவாக, இந்த உலகத்தில் மிச்சமிருக்கும் கடைசி மென்மையான செயல் மாதிரி. அவள் கண்கள் மூடியிருந்தன. உதட்டில் ஒரு புன்னகை உறைந்திருந்தது — வலியில்லாத, பயமில்லாத, அழகான கனவை கண்டபடியே போய்விட்டவள் புன்னகை.

என் நெஞ்சுக்குள் ஏதோ வெடித்தது — சத்தமில்லாமல். இது இன்றைய வலி அல்ல. இது நூறு பிறவிகளின் வலி — ஒவ்வொரு ஜென்மத்திலும் அவளை கண்டு, தொட்டு, இழந்த வலி — எல்லாமே இந்த ஒரு நொடியில் வெடித்தது.

அவள் குளிர்ந்த கையை என் கன்னத்தில் வைத்துக்கொண்டேன். அந்த குளிர்ச்சியில் — வேறொரு காலத்தின் வெம்மை உணர்ந்தேன்.

"ஃபரா... பிரியா..." என் உதடுகள் கிசுகிசுத்தன. "ஒவ்வொரு பிறவியிலும் நீ வருகிறாய். ஒவ்வொரு பிறவியிலும் விதி பிடுங்கிக்கொள்கிறது. வேறொரு காலத்தில் நான் ஏழாம் நாள் மடிந்தேன். இந்த பிறவியில் நீ அதே நாளில் — நாம் சந்தித்த அதே நாளில். முன்பு ஏழு நாட்களாவது கொடுத்தது — இப்போது ஒரு காலை நேரம் மட்டுமே."

கண்ணீர் அவள் குளிர்ந்த கையின் மீது விழுந்தது.

அப்போது தெரிந்தது — அவள் நெஞ்சின் மீது வைத்திருந்த கையில் ஏதோ இருந்தது. மெதுவாக விரல்களை விலக்கினேன்.

ஒரு நட்சத்திர வடிவ நகை. பொன்னால் ஆனது. சிறியது. மிகவும் பழமையானது.

என் மூச்சு நின்றது. அது நான் செய்த நகை — பல யுகங்களுக்கு முன்பு அவளுக்காக கையால் செய்த பொன் நட்சத்திரம். என் கடைசி மூச்சில் என் கையில் இருந்தது. என்னோடு புதைக்கப்பட்டதாக நினைத்தேன் — ஆனால் இங்கே இருக்கிறது. அவள் கையில். இந்த நூற்றாண்டில்.

நான் அவளை தேடி மடிந்தேன். அவள் என்னை தேடி பிறந்தாள் — என் கையிலிருந்து அந்த நட்சத்திரத்தை எடுத்து, பல ஜென்மங்களாக சுமந்து வந்தாள். ஆனால் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதெல்லாம் — விதி ஒரு சுவரை எழுப்புகிறது. சந்தையின் கூட்டம். பிளாட்பாரத்தின் கூட்டம். மரணம் என்ற சுவர்.

அந்த நட்சத்திரத்தை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். வானத்தை பார்த்தேன். இருளில் ஒரு நட்சத்திரம் மின்னியது — தனியாக, தெளிவாக, அணையாமல்.

அவளா?

தேடல் நிற்காது. ஒருபோதும் நிற்காது. ஏனென்றால் சில ஆத்மாக்கள் ஒன்றோடொன்று பின்னப்பட்டிருக்கின்றன — காலத்தால் அறுக்க முடியாமல், மரணத்தால் மறைக்க முடியாமல், விதியால் கூட முடிக்க முடியாமல்.

அந்த நட்சத்திரம் மின்னுகிறது — இன்றும், என்றும்.